Monday, December 24, 2012

மோடியிடம் டியூஷன் படியுங்கள் முதல்வர்களே!




சோனியாக்கள், ராகுல்கள், மன்மோகன்கள் ஆகியோரின் காழ்ப்புணர்ச்சியையும், கபட பிரசாரத்தையும் தாண்டி குஜராத் மக்கள் நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக தங்களுக்கு முதல்வர் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.



ஆம், இங்கே ஆரம்பத்திலேயே முக்கியமான விஷயம் மோடி முதல்வர் ஆக வில்லை. குஜராத் மக்கள் மோடியைத் தங்களின் முதல்வர் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.



மூன்றாவது முறையாக தொடர்ந்து குஜராத்தை ஆளும் வாய்ப்பு மோடியின் கைகளுக்கு வந்ததில் மந்திரமோ, தந்திரமோ எதுவும் இல்லை. அறிவியலையும், மக்களின் வாழ்வியலையும் இணைத்து மோடி செய்திருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனைகள்தான்.



மீண்டும் அறுதிப் பெரும்பான்மை பெறுவதற்கு மோடி இலவச கலர் டி.வி. கொடுக்கவில்லை, இலவச லேப்டாப் கொடுக்கவில்லை, இலவச மிக்ஸி கிரைண்டர், பேன் கொடுக்கவில்லை. தாலிக்குத் தங்கத்தை இலவசமாய் கொடுக்கவில்லை.



பிறகு என்ன கொடுத்தார்?



ஒவ்வொரு குஜராத்தியனும், குஜராத்தியளும் தங்கள் சொந்தக் காலில் நின்று சம்பாதிக்கத் தேவையான பொருளாதாரக் கட்டமைப்பை செய்து கொடுத்தார்!



மோடியின் அரசோடு சேர்ந்து சில ஆண்டுகள் வேலை செய்த ஒரு தொண்டு நிறுவனத்தின் ஆலோசகர் குஜராத்தில் மோடி இப்போது பெற்றிருக்கும் வெற்றி பற்றி தமிழ் லீடரிடம் பேசினார்.



‘‘குஜராத்தில் மோடி வெற்றி பெற்றதை குஜராத்துக்கு வெளியே இருப்பவர்கள்தான் ஆச்சரியமாகவும்,சஸ்பென்ஸ் வெற்றியாகவும் பார்க்கிறார்கள். ஆனால் இது நாங்கள் எதிர்பார்த்த வெற்றி. எல்லா கேள்விகளுக்கும் முழுமையாக சரியான விடை எழுதிய ஒரு மாணவன் தேர்வில் முதலாவாதாக வருவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

அதேபோலத்தான் கடந்த ஐந்தாண்டுகளில் மோடி மக்களின் எல்லா பிரச்னைகளையும் ஒரு மாணவன் சரியாக புரிந்து தேர்வு எழுதுவதைப் போல தீர்த்துவைத்தார். அதனால் மக்கள் என்னும் ஆசிரியர்கள் மோடியை மூன்றாவதாக முதல்வர் என்ற அடுத்த வகுப்பு பாஸ் பண்ண வைத்திருக்கிறார்கள்.

மோடியின் வெற்றிக்கும் மிக முக்கியக் காரணம்,

திட்டமிட்டுதல், திட்டமிட்டதை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துதல், நடைமுறைப்படுத்துவதை குறிப்பிட்ட காலத்துக்குள் முழுமைப்படுத்துத்தல் ஆகிய மூன்றும்தான்.

குஜராத்தின் மாவட்டம் ஒன்றில் ஆற்றுச் சமவெளியில் புதிதாக ஒரு வாய்க்கால் வெட்ட அரசாங்கம் முடிவெடுக்கிறது என்றால், பொதுப் பணித்துறை அதிகாரிகளும், வேளாண்துறை அதிகாரிகளும் மட்டும் இந்தப் பணியைச் செய்வதில்லை. மோடி அனைத்துத் துறைச் செயலாளர்களையும் கலந்து ஆலோசிப்பார். அங்கே வாய்க்கால் வெட்டினால் விவசாய ரீதியாக என்ன பலன் கிடைக்கும்? அப்படி விளைபொருள் கிடைக்கும்போது அந்த விளைபொருள்கள் மூலம் என்ன தொழில் மேம்பாடு அடையும்? அந்தத் தொழிலில் என்ன புதிய உத்திகளைக் கையாளலாம்?

இப்படி சங்கிலித் தொடராகக் கேள்விகள் கேட்டு, அந்த வாய்க்கால் வெட்டும் பணியில் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவார். இதனால் அந்த வாய்க்கால் வெட்டும் பணி மூலம் வேளாண் வளர்ச்சி, தொழில் வளர்ச்சி என்று இரண்டும் திட்டமிட்டு நிறைவேற்றப்படும். அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்துச் செயலாற்றும் அறிவு மோடிக்கே உரியது.


எனவே மோடி குஜராத்தில் மோடி வெற்றிபெற்றதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. அவர் மக்களுக்கு ஏதும் செய்யாமல் இருந்தது வெற்றி பெற்றால்தான் அது ஆச்சரியம் தருவதாக இருக்கவேண்டும். மோடியிடமிருந்து தமிழகம் மிக அதிக பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்’’ என்று முடித்தார் அந்த தொண்டு நிறுவனத்தின் ஆலோசகர்.



தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆருக்குப் பிறகு முதல்வர்கள் மாறி மாறி ஆட்சியில் அமர என்ன காரணம்?



கருணாநிதி ஆட்சியில் தங்களுக்கு மாற்றம் வரும் என்று நம்புகிறார்கள். ஐந்து ஆண்டுகள் காத்திருக்கிறார்கள். ஒரு மாற்றமும் வரவில்லை என்று வெதும்பி ஜெயலலிதாவிடம் கொடுக்கிறார்கள். ஜெயலலிதா ஆட்சியில் ஐந்து வருடம் காத்திருக்கிறார்கள். அப்போதும் வாழ்நிலையில் மாற்றம் வரும் என்று நம்பி ஏமாந்து மீண்டும் கருணாநிதியிடம் ஆட்சியைக் கொடுக்கிறார்கள்.



இப்படி மக்கள் தங்கள் நிலையில் மாற்றம் வரும் என்று நம்பி நம்பி ஏமாந்து போவதால்தான், ஆட்சியில் மாற்றம் செய்கிறார்கள். ஆனால் குஜராத்தில் மோடி ஆட்சியில் தங்கள் வாழ்நிலையில் மாற்றமும் முன்னேற்றமும் வருவதை மக்கள் அனுபவிக்கிறார்கள், அதனால்தான் தங்களை மாற்றிய மோடியை மாற்றாமல் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்தார்கள்.

குஜராத்தில் இடைத்தேர்தலில் பி.ஜே.பி. கடுமையாக தோல்வி அடைந்ததால் இடைக்கால முதல்வராக நியமிக்கப்பட்டவர்தான் மோடி. அப்படிப்பட்டவர் எப்போதைக்குமான முதல்வர் என்று தன் நிலையை உயர்த்தியது மக்கள் நிலையை உயர்த்தியதால்தான்.

மோடியின் தோழி என்று சொல்லும் ஜெயலலிதா மோடிக்கு பதினெட்டு வகை கூட்டு வைத்து விருந்து வைத்தார் என்பதெல்லாம் பழைய செய்தி.



மின்சாரம், சாலைப் போக்குவரத்து, பால் பண்ணைத் தொழில், சாராய ஒழிப்பு என்று குஜராத்தின் முக்கிய அம்சங்கள் ஒன்றையாவது தமிழகம் பின்பற்றுகிறதா? ஜெயலலிதா உண்மையிலேயே மோடியின் தோழியாக இருக்கும் பட்சத்தில் குஜராத்தில் அவர் நடைமுறைப்படுத்திய திட்டங்களை ஏன் இங்கே இவர் கொண்டுவரவில்லை?



தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல... இன்றைய இந்தியாவின் அரசியல் ஸ்திரமற்ற நிலையில் எந்த மாநிலத்துக்கும் குஜராத் பாடமாகத் திகழ்கிறது!



மத்திய அரசுக்கு மின்சாரம் வேண்டுமா என்று கேட்கிற தைரியமும் இருப்பும் குஜராத்துக்கு இருக்கிறது ஏன் என்றால்... சாக்கடையிலிருந்து கூட மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது குஜராத். நாமோ கூவம் கூவம் என்று அதில் கொசு உற்பத்தி செய்துகொண்டிருக்கிறோம்.



தொழில்நுட்பம், மக்கள் நலன் ஆகியவற்றை ஒரே நேர்க்கோட்டில் நிறுத்தியிருக்கிறார் மோடி. இங்கேயே தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஊழல் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறோம்.



எனவே இமேஜ் பார்க்காமல் ஈகோ பார்க்காமல்...



குஜராத்தின் முதல்வர் மோடியின் பதவியேற்பு விழாவுக்குச் செல்லும் நமது தமிழக முதல்வர் உள்ளிட்ட இந்தியாவின் மற்ற மாநில முதல்வர்கள்...



ஒருவாரம் குஜராத்தில் தங்கி சுற்றிப் பார்த்து மோடி என்ன செய்திருக்கிறார் நாம் ஏன் அதைச் செய்யவில்லை என்பதை கற்றுக் கொண்டுவரவேண்டும்.



மதக் கலவரத்தின் காரணகர்த்தா, அமெரிக்காவால் விசா மறுக்கப்பட்டவர் என்று மோடியின் மீது எத்தனை சேறு வீசப்பட்டாலும்,



குஜராத் மக்களின் மன்னனாக அவர் இன்றும் என்றும் திகழக் காரணம் என்ன என்பதை மற்ற மாநில முதல்வர்கள் குஜராத் சென்று டியூஷன் கற்றுவரவேண்டும்.



நன்றாகப் படிக்கும் மாணவனிடம் மற்ற மாணவர்கள் சென்று பாடம் படிப்பது நமது பள்ளிகளில் சகஜமாக நடப்பதுதானே!



அதனால் மற்ற மாநிலங்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்கு மோடியின் டியூஷன் கட்டாயம் தேவை


thanks to www.tamilleader.in and bjp thondan

1 comment:

  1. Good Article, Well Written ... on the straight sid of the fact file ...

    ReplyDelete