Thursday, August 23, 2012

எது உலகஅதிசயம்?

எது உலகின் அதிசயம்? இத்தாலியில் உள்ள  பைசா நகரத்து சாய்ந்த கோபுரமா அல்லது பாரதத்தின் தஞ்சை பெரியகோயிலா? ஒரு ஒரு அலசல்.

                               உலகின் அதிசயம் எனக் கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் சுமார் 177 வருடங்களாக (ஆகஸ்ட்8,1173-1372) மூன்று கட்டமாக கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை கட்டும் போது அதன் கீழ் உள்ள மண்ணை பரிசோதனை செய்யாமல் ஒரு கட்டிடம் கட்டும் முன் செய்யப்படும் எந்த ஒரு அடிப்படை விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல் கட்ட ஆரம்பித்தனர். கட்டிடத்தின் அடித்தளம் மிகவும் மோசமாக கட்டப்பட்டது. இதனால் கட்டிடம் சாயத்தொடங்கியது, இரண்டாம் தளம் கட்டும் பொழுது போர் மூண்டதால் இதன் கட்டுமானம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் மறுபடியும் கட்டிடத்தை கட்டத் தொடங்கும் போது அதன் அடித்தள மண் இறுகி ஓரளவிற்கு ஒத்துழைத்தது. இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது. எந்த ஒரு கட்டிடக் கலையின் அடிப்படை விதிகளையும் பின்பற்றாமல் கட்டப்பட்ட கட்டிட கலைக்கே அவமானமாக விளங்கும் ஒரு கேவலமான கட்டிடத்திற்கு எடுத்துக்காட்டான பைசா கோபுரம் உலக அதிசயப்பட்டியலில் இன்றும் உள்ளது.

                                 நமது பாரத திருநாட்டின் தமிழ்த்தஞ்சையில் கட்டிட கலைக்கே பெருமை சேர்க்கும் மாவீரன் இராஜராஜசோழனால் கட்டப்பட்ட 216அடியில் உலகையே மிரளச்செய்யும் தஞ்சாவூர் ஸ்ரீபிரகதீஸ்வரர் பெரியகோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது. இதன் கோபுர உச்சியில் உள்ள ஒரே ஒரு பாறை மட்டுமே சுமார் 80 டன் (80,000கிலோ)எடை கொண்டதாகும். தஞ்சைப் பகுதியைச் சுற்றி சுமார் 100 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இவ்வளவு பெரிய பாறைகளைக் கொண்ட மலைப்பகுதி கிடையாது. பிறகு இவ்வளவு பாறைகளை எங்கிருந்து கொண்டு வந்தார்கள்?, எப்படி கொண்டு வந்தார்கள்?, இவ்வளவு குறுகிய காலத்திற்குள் எப்படி பிரமாண்டமான பெரியகோயிலை கட்டினார்கள்? என்பது எல்லாமே ஆச்சர்யமான நம் கண் முன்னே உள்ள உண்மை. உலகமே ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டு இருக்கும்  இந்த பெரியகோயில் 1000 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் கம்பீரமாக காட்சியளித்து நிற்கிறது. எந்த தொழில் நுட்ப வசதியும் இல்லாத அந்த காலத்தில் இவ்வளவு பிரமாண்டமான பெரியகோயில் எப்படி கட்டப்பட்டது என்ற கேள்விக்கு வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ளது. இவ்வளவு பெருமை வாய்ந்த கோயில் உலக அதிசயப்  பட்டியலில் இல்லை.

                               நன்கு சிந்தித்து பாருங்கள் சரியாக கட்டப்படாமல் சாய்ந்து நிற்கும் ஒரு கட்டிடம் உலக அதிசயமா? அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாகவும்,பிரமாண்டமாகவும் நிற்கும் தஞ்சை ஸ்ரீபிரகதீஸ்வரர் ஆலயம் உலக அதிசயமா? வெளியில் உள்ளதையே பார்த்து வியந்து பேசும் நாம் நமக்கு அருகிலேயே இருக்கும் அரிய பொக்கிசங்களையும் அதன் அருமை பெருமைகளையும் மறந்து விடுகிறோம். 



                       

Friday, August 17, 2012

'நம்பியவருக்கு நடராஜன்,நம்பாதவர்க்கு வெறும் ராஜன்'

  நம்பியவர்களுக்கு நடராஜன் நம்பாதவர்க்கு   வெறும் ராஜன்


மூதறிஞர் ராஜாஜி சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த சமயம் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு உண்டானது.நீர்த்தேக்கங்கள் அனைத்தும் வற்றிவிட்டன.கிடைக்கும் நீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்துபோனது.

                                சென்னையில் இருந்து மக்கள் வெளியேறினால் பிரச்சினை தீரும் என்ற நிலை ஏற்ப்பட்டது.அதிகாரிகளும் இதே யோசனையைத் தெரிவித்தனர்.இந்த யோசனையை முதல்வர் ராஜாஜி ஏற்க்கவில்லை.அவர் வேறொரு கருத்தை வெளியிட்டார்.

                                  அதன்படி ஒரு குறிப்பிட்டநாளில் சென்னையைக் காப்பாற்றுமாறு எல்லா வழிபாட்டுத் தலங்களிலும் இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்யும்படி மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.

                                 சட்டப்பேரவையில் ஒரு கட்சியினர் இராஜாஜி கூறியதைக் கேலி செய்தார்கள்.சென்னை நகரைக் காப்பாற்ற இதுதான் வழியென்றால் மக்களை காப்பாற்ற வழியே இல்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

                            ஆனால் முதல்வரின் வேண்டுகோளின்படி மக்கள் அனைவரும் கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.24 மணி நேரத்திற்குள் சென்னை நகர் முழுவதும் மேகங்கள் திரண்டன.மூன்று நாட்கள் இடைவிடாமல் மழை பெய்தது.நீர்த்தேக்கங்கள்,ஏரி,குளங்கள் அனைத்தும் நிரம்பின.குடிநீர் பிரச்சினையில் இருந்து சென்னை நகரம் தப்பியது.

                               இந்த நிகழ்ச்சி நடந்தது ஒரு மே மாதத்தில்,அது கடுமையான கோடைகாலம். பிரார்த்தனையால் மழை பெய்யவில்லை என்றும் இது ஒரு தற்செயல் நிகழ்வு என்றும் குற்றம்சாட்டிய கட்சியினர் கருத்து வெளியிட்டனர்.

                                அதற்க்கு இராஜாஜி "நீங்கள் எது வேண்டுமானாலும் கூறுங்கள்.மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்தால் அதிசயம் நிகழும்"என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு அத்தாட்சி என பதிலளித்தார்.

                                'நம்பியவருக்கு நடராஜன்,நம்பாதவர்க்கு வெறும் ராஜன்'என்று ஒரு சுலவடை சொல்வார்கள்.நம்பினார் கெடுவதில்லை  என்ற வேதங்களின் கூற்றுக்கு இந்த நிகழ்ச்சியை உதாரணமாக சொல்லலாம்.