Tuesday, December 28, 2010

முளைப்பாரி

நண்பர்களே நீங்கள் பார்த்து கொண்டிருப்பது எங்கள் ஊரின் சக்தி வாய்ந்த ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவிற்கு எங்கள் வீடு தயார் செய்த முளைப்பாரியின் வீடியோ

எனது ஊரின் பெயர் திருப்பாலைக்குடி.ராமநாதபுரம் மாவட்டம்,திருவாடனை வட்டத்தில் அமைந்த ஊர் எங்களது.கிராமமும் அல்லாமல் நகரமும் அல்லாமல் இரு சாயலும் கொண்ட ஊர் எங்களது ஊர்.வங்கக்கடல் தாலாட்டும் இரண்டு கிலோ மீட்டர் நீளம் கொண்ட கடற்கரையின் சொந்தக்காரர்கள் நாங்கள்.இதிகாசத்தொடு தொடர்பு கொண்ட ஊர்.திரேதா யுகத்தில் நடந்த ராமாயணத்தில் ஸ்ரீ ராமமூர்த்தி இலங்கை செல்ல கடலை அமைதிபடுத்த யாகம் செய்த தேவிபட்டினம் எங்கள் ஊரிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.அன்றிலிருந்து அலைகடல் தாலாட்டும் வங்ககடல் எங்கள் பகுதியில் மட்டும் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்யாமல் இருக்கும்.மோர்ப்பண்ணை,திருப்பாலைக்குடி,தேவிபட்டினம் ஆகிய ஊர்களில் மட்டும் கடலில் பெரிய அலைகள் தோன்றுவதில்லை.அதற்க்கு அடுத்து உள்ள ஊர்களில் அலையின் சீற்றம் இருக்கும்.

எங்கள் ஊரில் இஸ்லாமிய ,இந்துமக்கள் சம அளவில் வசிக்கிறோம்.இஸ்லாமியர்களின் வழிப்பாட்டுத்த்லம் மூன்று எங்களது ஊரில் உண்டு.இந்துக்களின் கோவில்கள் இருபதிற்கும் மேல் உண்டு.அதில் எங்கள் பகுதியல் அமைந்த ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலயத்திற்கு ஆவணி மாதம் திருவிழா உண்டு.ஆவணி வளர்பிறையில் கோவிலுக்கு காப்பு கட்டுதளுடன் திருவிழா தொடங்கும்.திருவிழாவின் சிறப்பு முளைப்பாரி.

காப்புகட்டுதளுக்கு முந்திய தினங்களில் முளைப்பாரி வளர்க்கும் பக்தர்கள் முளைப்பாரி வளர்ப்பதற்கு தேவையான பொருட்களை சேகரிக்க தொடங்குவார்கள்.பசுவின் காய்ந்த சாணம்,செவனாம்பு என்று கிராமங்களில் சொல்லப்படும் ஒரு வகை செடி,சல்லடை அதாவது பனைமரத்தின் சருகு,முத்துக்கள்(சோழ விதை ,பயறு விதை,கடலை விதை).முதல் நாள் காப்பு கட்டியவுடன் பக்தர்கள் ஒவ்வொரு குழுவாக பிரிந்து தங்களுக்கு தோதான ஒரு வீட்டில் சென்று தங்கள் சேகரித்து வைத்துள்ள பொருட்களுடன் செல்வர்.அங்கு பாரியினை வைத்து பாரியின் அகன்ற பகுதியின் வழியாக சல்லடையை வைத்து பாரியின் அடிப்பகுதியில் உள்ள சிறிய துவாரத்தினை அடைத்து விடுவர்.பிறகு செவனாம்பு மற்றும் நொறுக்கிய காய்ந்த சாணம் இரண்டினையும் பாரியில் நிரப்பி பின் முத்துக்களை அதில் பரப்பி தண்ணீர் ஊற்றி வைப்பார்.பின்பு தினசரி காலையும் மாலையும் தண்ணீர் ஊற்றி கவனத்தோடு பராமரிப்பார்.ஏழாம் நாள் வரும்பொழுது முத்துக்கள் வளர்ந்து செடியாகிவிடும்.தயார் செய்த முலைப்பாரியினை எட்டாம் நாள் இரவு மாரியம்மனின் கோவில் முன்பு அமைத்துள்ள மேடையில் அனைத்து பக்தர்களும் கொண்டு வந்து வைத்து விடுவர். ஒன்பதாம் நாள் காலையில் புத்தாடை அணிந்து அனைவரும் கோவிலுக்கு வருவர்.பெண்கள் முளைப்பாரி பாடலை பாடிக்கொண்டு முளைகொட்டுவர்.பின்பு பக்தர்கள் அனைவரும் முளைப்பரியினை தலையில் தூக்கிக்கொண்டு ஊர்வலமாக சென்று கடலில் முலைப்பாரியினை கொட்டி விட்டு கோவிலில் சென்று அம்மனை வணங்கி வீடு வருவர்.

No comments:

Post a Comment